அர்ஜூனா விருது தேர்வுக்கான புதிய வழிகாட்டி முறையை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதுக்கான வீரர்-வீராங்கனைகள் தேர்வு விஷயத்தில் அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய விளையாட்டு அமைச்சகம் அர்ஜூனா விருது தேர்வுக்கான புதிய வழிகாட்டி முறையை வெளியிட்டு இருக்கிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்பவர்களின் பெயர்கள் தானாகவே கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்கு பரிசீலிக்கப்படும். இரு விருதையும் ஏற்கனவே பெறாதபட்சத்தில் எத்தகைய பதக்கம் வென்று இருக்கிறார்கள் என்பதை பொறுத்து விருது முடிவு செய்யப்படும்.
ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலககோப்பை போட்டி, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சர்வதேச போட்டிகளில் வீரர்களின் செயல்பாட்டுக்கு 90 சதவீதமும், தேர்வு கமிட்டியின் பரிந்துரைக்கு 10 சதவீதமும் முன்னுரிமை கொடுக்கப்படும். மாற்றுத் திறனாளி வீரர்கள், பெண்கள் மற்றும் ஒலிம்பிக்கில் இடம் பெறாத கிரிக்கெட் உள்பட இந்தியாவில் விளையாடக்கூடிய ஆட்டங்களுக்கும் போதுமான முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒரு ஆண்டில் ஒரு ஆட்டத்துக்கு ஒரு விருது என்பது குழு போட்டியினர் மற்றும் பாலின அடிப்படையில் இரண்டாக உயர்த்தி வழங்கலாம் என்று கமிட்டி சிபாரிசு செய்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஒரு ஆண்டில் 15 பேருக்கு தான் அர்ஜூனா விருது வழங்குவது வாடிக்கையாகும். ஆனால் குறிப்பிட்ட ஆண்டில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏதாவது நடந்தால் கூடுதலான நபர்களை விருதுக்கு தேர்வு கமிட்டி பரிந்துரை செய்யலாம். தகுதியான நபருக்கு விருது கிடைக்காத பட்சத்தில் நியாயமான காரணத்தை சுட்டி காட்டி தேர்வு கமிட்டி பரிந்துரை செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இந்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
0 comments:
Post a Comment